×

போலீசார் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கினால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: தமிழகம் முழுவதும் உடனடியாக அமல்படுத்த டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை: போலீசார் ஹெல்மெட் போடாமல் விபத்தில் சிக்கினால், நிலைய பொறுப்பு அதிகாரிகள் தான் அதற்கு பொறுப்பாவார்கள். எனவே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது  சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து வந்தனர். சென்னையிலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் ஹெல்மெட் அணியாமல் சென்று நடக்கும் விபத்துகள் அதிகரித்து வந்தன. இரவு நேரங்களில் குடித்து விட்டு செல்கிறவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தான் அதிக அளவில் விபத்துகள் நடப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். ஆனாலும், இதுபோன்ற விபத்துகள் குறையவில்லை. குறிப்பாக இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசாரே ஹெல்மெட் அணியாமல் அதிக அளவில் விபத்துகளில் சிக்கி வந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து, கால்களை இழந்து வந்தனர். பல மாதங்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையும் ஏற்பட்டு வந்தது. இதனால், தற்போது போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கினால், அவர்களுடைய பொறுப்பு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் கமிஷனர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெரும்பாலான போலீசார் விபத்துகளில் சிக்காமல் வாகனங்களை ஓட்ட வேண்டும். அதையும் மீறி சில விபத்துகள் ஏற்படுகின்றன. அதில் உயிரிழப்புகளும், கடுமையான காயங்களும் ஏற்படுகின்றன. இதனால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்குமே தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். போலீசார்தான் சட்டத்தை அமல்படுத்துகிறவர்கள். இதனால் போலீசார் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். வாழ வேண்டும். இதனால் ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துகிறவர்கள் நாமே சட்டத்தை மீறக் கூடாது. ஹெல்மெட் அணியாமல் செல்வது மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 129ன் கீழ் குற்றமாகும். இதனால் போலீசாரும் சட்டத்தை மீறக் கூடாது என்பதை கண்காணிப்பது, அவர்களின் பொறுப்பு அதிகாரிகளின் கடமையாகும். இதனால் பாதுகாப்புக்கு செல்லும் போலீசார், காவல்நிலையங்களில் பணியாற்றும் போலீசார் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இது குறித்து பொறுப்பு அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல், போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்தாலோ, கடும் காயம் ஏற்பட்டாேலா, காயம் அடைந்த போலீசாரின் பொறுப்பு அதிகாரி அதாவது இன்ஸ்பெக்டர் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதை கண்டிப்பான முறையில் உயர் அதிகாரிகள் பின்பற்றி விபத்துக்களை குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் டிஜிபி எச்சரித்துள்ளார்.

* 2002 முதல் இன்று வரை இந்தியாவில் அதிக விபத்துகளை சந்தித்து வரும் மாநிலம் தமிழகம் தான்.
* 2017ல் மட்டும் தமிழக அரசு கணக்குப்படி 65,562 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 90,729 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Suspende ,DGP ,DG Rajendran ,Tamil Nadu , police, accident, without helmet, Inspector, Suspended, DGP Rajendran, Tamil Nadu
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...